நெல்லையில் அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

நெல்லையில் அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

Update: 2018-11-18 22:30 GMT
நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை தென்காசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இரவில் வீடு திரும்பினர். வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். வீட்டில் இருந்த 6 பவுன் நகை, ரூ.42 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் வெங்கட கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு, சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தது. கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை அருகே ஜோதிபுரம் பகுதியில் உள்ள எஸ்.கே.நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (வயது 59). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் பாளையங்கோட்டையில் நேற்று நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார்.

காலை 10 மணிக்கு சென்று விட்டு, இரவு 9 மணிக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன.

வீட்டில் இருந்த கவரிங் நகைகள், ஸ்பீக்கர், கைக்கெடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. முத்துப்பாண்டியன் விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைக்காததால், அவைகள் தப்பின. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்