மேகமலை அருவிக்கு வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

மேகமலை அருவிக்கு வரும் வாகனங்களை தணிக்கை செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2018-11-18 22:30 GMT
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இங்கு வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் நீர்வரத்து காணப்படும். அருவியில் குளிக்க திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் அருவியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இங்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மது அருந்த தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேகமலை அருவியில் தடுப்புக்கம்பிகள், பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. மேலும் மேகமலை வனத்துறையினர் சார்பில் அருவியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு பிளாஸ்டிக், மதுபாட்டில் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அவ்வப்போது போலீசாரும் அருவியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது மேகமலை அருவிக்கு வரும் வாகனங்கள் முறையாக தணிக்கை செய்யப்படுவதில்லை. எனவே சுற்றுலா பயணிகள் வாகனங்களில் மதுபாட்டில், பிளாஸ்டிக் பைகளில் உணவு உள்ளிட்டவற்றை மறைத்து வைத்து அருவிக்கு எடுத்து செல்கின்றனர். இதனால் அருவி மீண்டும் மதுபான பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. தவிர பிளாஸ்டிக் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அருவியில் மது அருந்தி விட்டு போதையில் வாகனங்களை ஓட்டி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த நிலை நீடித்தால் அருவிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதனால் பெண்கள் அருவிக்கு குளிக்க வருவது குறைந்து விடும். எனவே வனத்துறை அதிகாரிகள் அருவிக்கு வரும் வாகனங்களை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்