வணிக வரித்துறையில் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள விதியை நீக்க வேண்டும் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வணிக வரித்துறையில் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள விதியை நீக்க வேண்டும் என்று மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-11-18 22:30 GMT
திருச்சி,

தமிழ்நாடு வணிக வரித்துறை அலுவலர் ஒன்றியத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் மாநில தலைவர் ஆலீஸ் ஷீலா தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக அரசில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியமர்வு செய்யப்பட்ட அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு முழுமையான ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வழிவகை செய்ய வேண்டும். அரசு அலுவலர் பணிக்காலத்தில் இறந்திடும் நிலையில் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை நிபந்தனை இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.

வணிக வரித்துறையில் துணை மாநில வரி அலுவலர் நிலையில் இருந்து மாநில வரி அலுவலர் பதவி உயர்வு பெற தமிழ்நாடு வணிக வரி சார்நிலை பணியாளர்கள் சட்ட விதி 6 (டி)-ன் கீழ் ஈராண்டு வரி விதிப்பு பணி முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

3 அல்லது 4 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் தான் ஈராண்டு வரி விதிப்பு பணி அளிக்கப்படுகிறது. நிர்வாக காரணங்களால் பதவி உயர்வில் ஏற்படும் காலதாமதங்களை போக்க இந்த விதியை நீக்கம் செய்யவேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வணிக வரி ஆணையர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனியான பதவி உயர்வு பட்டியலை நீக்கவேண்டும். வணிக வரித்துறையில் வணிக வரி ஆணையர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் உள்ள அலுவலர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பணியிடத்தில் இருப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். பெரும்பாலான அலுவலர்களின் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படாததால் காலியாக உள்ளதை மாற்றி அந்த அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மேலும் செய்திகள்