பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் 2 பேர் கைது

பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகையையும் மீட்டனர்.

Update: 2018-11-19 23:00 GMT

பெருந்துறை.

பெருந்துறையில் உள்ள ஈரோடு சாலையில் பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். இதனை கவனித்த போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த நாகேஷ் என்கிற நாகேஸ்வரன் (வயது 30), உதயகோபால் ராஜா (35) என்பதும், அவர்கள் பெருந்துறையில் உள்ள வீடுகளில் திருடுவதற்காக அந்தப்பகுதியை நோட்டமிட்டதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் மீது வெள்ளோடு, மலையம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் 10–க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்தபோது 20 பவுன் நகை இருந்தது. அது திருட்டு நகை என்பதும் தெரியவந்தது. அதன்பின்னர் போலீசார் அந்த நகையை மீட்டனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நாகேஸ்வரன், உதயகோபால் ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன், 20 பவுன் நகையை எங்கு திருடினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்