மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் ரோகிணி தகவல்

மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோகிணி கூறினார்.

Update: 2018-11-19 23:00 GMT
சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வாரந்தோறும் திங்கட் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (நேற்று) பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 450 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்படி ஒரு பயனாளிக்கு கலெக்டர் விருப்ப நிதியில் இருந்து மருத்துவ செலவிற்காக ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். அதே போன்று 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஊன்றுகோள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.45 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவி, ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளி களுக்கு ரூ.37 ஆயிரத்து 440 மதிப்பில் 4 விலையில்லா தையல் எந்திரங்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சாரதாருக்மணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்