கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊரக பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் அமைச்சர் பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊரக பகுதிகளில் ஒரு வாரத்துக்குள் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறி உள்ளார்.

Update: 2018-11-19 23:00 GMT
நாகப்பட்டினம்,

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகள், மின் சீரமைப்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

புயலால் 201 துணை மின்நிலையங்கள் சேதமடைந்து உள்ளன. இந்த 4 மாவட்டங்களில் (நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை) கிட்டத்தட்ட 56 லட்சம் மின் இணைப்புகள் இருக்கின்றன. இதுவரை 18 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் நகராட்சியில் 87 சதவீதமும், திருவாரூர் நகராட்சியில் 50 சதவீதமும், தஞ்சாவூர் மாநகராட்சியில் 95 சதவீதமும், புதுக்கோட்டையில் 50 சதவீதமும் மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

மின்சாரத்துறை தான் அதிக பாதிப்புகளையும், இழப்புகளையும் சந்தித்துள்ளது. மின்சாரம் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட போர்க்கால அடிப்படையில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டு குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் ஓரிரு நாளில் முழுமையாக வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளை பொறுத்தவரை இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

மின்சார வாரியத்திற்கு மட்டும் இதுவரை கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் கணக்கெடுப்பு பணி முடிவடையவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்