இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் முற்றுகை போராட்டம்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-19 23:00 GMT
நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே முன்னிலை வகித்தார்.

தமிழ்ப்புலிகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் குமார், தென்மண்டல துணை செயலாளர் தமிழரசு ஆகியோர் தலைமையிலும், கடையம் பாரதியார் தெரு பெண்கள் மாடத்தி தலைமையிலும் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்துக்கு வாகனங்கள் உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடையம் பாரதியார் தெருவில் 40 வருடங்களாக வீடு கட்டி குடியிருந்து வரும் அருந்ததியர் இன மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனே அந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேவர் பேரவையினர் தென்மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள வெள்ளப்பனேரி கிராமத்தை சேர்ந்த எங்கள் சமுதாய இளைஞர்கள் 9 பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், குடும்பர், பண்ணாடி, காலடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதியான், பள்ளர் ஆகிய உட்பிரிவுகளாக உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்