கால்வாயில் மிதந்து வந்த இளம்பெண் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

திருவட்டார் அருகே கால்வாயில் மிதந்து வந்த இளம்பெண் பிணத்தை போலீசார் கைப்பற்றி, அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-11-20 23:00 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே செட்டிசார்விளை பகுதியில் சிற்றார் பட்டணங்கால்வாய் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் வெள்ளம் கரை புரண்டு செல்கிறது. இந்த கால்வாயில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பது வழக்கம்.

அதன்படி நேற்று காலையில் குளிக்க சென்ற பொதுமக்கள் தண்ணீரில் ஒரு இளம்பெண் பிணம் மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவருக்கு சுமார் 25 வயது இருக்கும். சிவப்பு, மஞ்சள், கருப்பு நிறம் கலந்த சுடிதாரும், கைக்கடிகாரம், மோதிரம், வளையல் போன்றவை அணிந்திருந்தார். கால்வாயில் பிணம் மிதந்து வந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு கூடினர். அவர்களிடம் இறந்தவரை அடையாளம் தெரியுமா? என்று போலீசார் விசாரித்தனர். ஆனால், யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. இதனால், இறந்தவர்  உள்ளூர் நபராக இருக்க வாய்ப்பு இல்லை என போலீசார் கருதுகிறார்கள்.

தொடர்ந்து, பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்து பிணத்தை ஆற்றில் வீசி சென்றார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்