போளூரில்: கோவில் பிரச்சினை தொடர்பாக 14 பேர் மீது வழக்கு

போளூரில் கோவில் பிரச்சினை தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-11-20 22:00 GMT
போளூர், 

போளூரில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சோமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் பரம்பரை தர்மகர்த்தாவாக வீரபத்திரன் என்பவர் இருந்த வருகிறார். இந்த கோவிலில் 1973-ம் ஆண்டு அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் அய்யப்பன் சன்னதி அமைக்கப்பட்டது. கார்த்திகை மற்றும் முக்கிய மாதங்களில் அய்யப்ப பக்தர்கள் இக்கோவிலில் மாலை போட்டு, இருமுடி கட்டி சபரிமலை செல்வது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மகர்த்தாவிற்கும், அய்யப்ப பக்தர்கள் சங்கத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கார்த்திகை மாத பூஜைக்காக அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர் சென்றபோது தர்மகர்த்தா அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தார். இதையடுத்து 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதான படுத்தியதை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து இருதரப்பினரும் பிரச்சினையில் ஈடுபடுவதாலும், கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாலும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். அதன்படி தர்மகர்த்தா வீரபத்திரன் அவரது மகன் நவீன் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சங்கம் தரப்பில் வேணுகோபால், மணிவண்ணன், குணசேகரன் உள்பட 12 பேர் என மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து உதவி கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்துள்ளார். 

மேலும் செய்திகள்