வைகை தண்ணீரை கண்மாய்க்கு கொண்டு வரக்கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

இளையான்குடி கண்மாய்க்கு வைகை தண்ணீரை கொண்டு வரக்கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

Update: 2018-11-20 22:45 GMT

இளையான்குடி,

வைகை அணையில் திறந்து விடப்படும் தண்ணீரை இளையான்குடி கண்மாய்க்கு கொண்டு வரவேண்டும் என்று இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் பொதுமக்கள் அனைத்து கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த முறை வைகையில் வந்த தண்ணீர் இளையான்குடி கண்மாய்க்கு வரவேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆனால் அதன்மீதான எந்தவித நடவடிக்கையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போராட்டம் நடத்தியவர்கள் கூறியதாவது:– இளையான்குடி கண்மாய்க்கு தண்ணீர் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பலமுறை வழியுறுத்தினோம் ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனை தீரவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் பெரிய கண்மாயில் தண்ணீர் நிரப்ப வேண்டும். அதற்கு வைகை தண்ணீர் வந்தால் மட்டுமே தீர்வாக அமையும். இதைத்தவிர கண்மாய்க்கு தண்ணீர் வருவதற்கு வேறு வழி கிடையாது என்றனர்.

மேலும் தகவலறிந்து வந்த தாசில்தார் தமிழரசனிடம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வந்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று அவர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் போராட்டம் நடத்தியவர்கள் சமாதானம் ஆகவில்லை.

இறுதியாக கோட்டாட்சியர் செல்வகுமார் மாவட்ட துணைகண்காணிப்பாளர் அப்துல்கபூர் ஆகியோர் சமாதானம் பேசி கண்மாயில் தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்