அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை பரமேஸ்வர் எச்சரிக்கை

கால அவகாசம் முடிவதற்குள் வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் எச்சரித்துள்ளார்.

Update: 2018-11-20 22:30 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் மாநகராட்சிக்கு, சொத்து வரி செலுத்த அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கால அவகாசம் முடிவதற்குள் வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் எச்சரித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

பெங்களூருவில் சொத்து வரி செலுத்த அடுத்த ஆண்டு(2019) மார்ச் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளவர்களிடம் இருந்து வசூல் செய்யும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த நிதி ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 31 கோடி சொத்து வரி மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது. ஆனாலும் இன்னும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வரி செலுத்தாமல் ஏராளமானவர்கள் பாக்கி வைத்துள்ளனர். பாக்கி வைத்துள்ளவர்களிடம் சொத்து வரியை வசூலிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பாக்கி வைத்துள்ளவர்கள் சொத்து வரியை கண்டிப்பாக செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் மீது பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை. அதனால் தான் அரசுக்கு எதிராக போராடுவதற்கு விவசாயிகளை பா.ஜனதாவினர் தூண்டிவிடுகின்றனர்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

அபராதம் வசூலிக்க...

இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சிக்கு விளம்பரம் மூலம் கிடைத்த வருவாய் தற்போது கிடைக்கவில்லை. இதனால் சொத்து வரி கட்டாமல் பாக்கி வைத்துள்ளவர்களிடம் இருந்து, வரியை வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும், அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவும் மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்