விருத்தாசலம் அருகே பரபரப்பு: 4 திருடர்களை மடக்கி பிடித்து தர்ம அடி - கிராம மக்கள் ஆவேசம்

விருத்தாசலம் அருகே 4 திருடர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2018-11-21 22:00 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ளது தொழுர் கிராமம். இந்த கிராமத்திற்கு நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிளில் மொத்தம் 5 பேர் வந்தனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போனது. உடன், அவர்கள் அங்கிருந்த ஒரு கடையில், பெட்ரோல் கேட்டுள்ளனர். அப்போது பெட்ரோலை வாங்கிய அந்த நபர்கள், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் பூட்டை உடைத்துள்ளனர். இதை பார்த்த கடைக்காரர், ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது, சாவி தொலைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் அவர்கள் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்தார். அதற்குள் அந்த நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து அந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு விரட்டி சென்று, அவர்களில் 4 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும், மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து கிராம மக்கள் பிடிபட்டவர்களிடம் விசாரித்த போது, அதே கிராமத்தை சேர்ந்த தேசிங்கு ராஜா என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் மற்றொரு மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டதே என்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த 4 பேருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, ஆவேசமாக தாக்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 4 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று, இவர்கள் எந்தந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடினார்கள், திருடியவற்றை என்ன செய்தார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்