மணல் குவாரியை மூடக்கோரி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - புதுப்பேட்டை அருகே பரபரப்பு

புதுப்பேட்டை அருகே மணல் குவாரியை மூடக்கோரி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-21 21:30 GMT
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே எனதிரிமங்கலம், காவனூர், கொரத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 10 தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கண்ட கிராமங்களில் மணல் குவாரி அமைத்தனர்.

அந்த குவாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும், விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்று கூறி மணல் குவாரியை உடனே மூட வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். மேலும் குவாரி தொடங்கிய நாள்முதல் அடிக்கடி மணல் லாரிகளை வழிமறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று எனதிரிமங்கலம், உளுந்தாம்பட்டு, காவனூர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு குவாரியில் இருந்து மணல் ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும். எனவே திறக்கப்பட்ட மணல் குவாரியை உடனே மூடவேண்டும் என்று பொதுமக்கள் தாசில்தாரிடம் முறையிட்டனர். இதற்கு தாசில்தார் மற்றும் போலீசார் இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்