ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான மேலும் ஒரு ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2018-11-24 22:30 GMT
விழுப்புரம், 

திருக்கோவிலூர் தாலுகா டி.எடப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ரவி (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, கொலை, மணல் கடத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேலும் மணல் கடத்தலை போலீசாருக்கு காட்டிக்கொடுத்ததற்காக கடந்த 27.6.18 அன்று அதே கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ஜபாரை (64) கொலை செய்த வழக்கில் ரவியை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ரவியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து ரவியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் ரவிக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மோகன் என்பவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்