காரைக்கால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கிரண்பெடி திடீர் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவர்னர் கிரண்பெடி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களை சந்தித்து குறைகள் எதுவும் கேட்கவில்லை.

Update: 2018-11-24 22:30 GMT
காரைக்கால்,

கஜா புயலுக்கு காரைக்கால் மாவட்டத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயலில் சிக்கி ஏராளமான வீடுகள், மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மீனவர்கள், விவசாயிகள் என பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நிவாரண முகாம்களில் பலர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இதையொட்டி முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவின்பேரில் சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். இதற்கான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இடைக்கால நிவாரணம் வழங்குமாறு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சேதம் ஏற்பட்டுள்ள காரைக்கால் பகுதிகளை மத்திய குழு விரைவில் பார்வையிட உள்ளது. இது குறித்த தகவலை அரசுக்குமத்திய உள்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினர். அரசு சார்பில் நிவாரண உதவி வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கவர்னர் கிரண்பெடி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடாமல் இருந்து வந்தார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்தநிலையில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு நேற்று அதிகாலை திடீரென கவர்னர் கிரண்பெடி புறப்பட்டுச் சென்றார். அவருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் மரியாதை வழங்கப்பட்டது.

அதனைதொடர்ந்து அவர் காரைக்கால் அரசலாற்றங்கரை, திரு-பட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமத்திற்கு சென்று புயலால் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார். பட்டினச்சேரியை அடுத்த நடுகளம்பேட், வடகட்டளை, நிரவி, காக்கமொழி, ஊழியபத்து, ஓடுதுறை வழியாக காரில் இருந்தவாறு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை கிரண்பெடி ஆய்வு செய்தார்.

கவர்னருடன் மாவட்ட கலெக்டர் கேசவன், சார்பு ஆட்சியர் விக்ராந்த்ராஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட கவர்னர் கிரண்பெடி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் யாரையும் சந்திக்காமல் சென்று விட்டார். கிரண்பெடி வருகை குறித்து தகவல் அறிந்து அவரை சந்திக்க பட்டினச்சேரி கடற்கரையில் அந்த பகுதி மீனவர்கள் ஒன்று திரண்டு இருந்தனர். ஆனால் அவர்களையும் கவர்னர் சந்திக்காமல் புறக்கணித்து சென்று விட்டார்.

ஆய்வு முடிந்த பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கிரண்பெடி வந்தார். அங்கு அரசுத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை நடத்தினார். அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கஜா புயல் காரைக்கால் மாவட்டத்தை தாக்கப்போவதாக அறிவிப்பு வந்தவுடன் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்திருந்தது. புயலுக்குப் பின்னரும் மீட்பு பணிகளை உடனடியாக செய்தது. இந்த நடவடிக்கைகளுக்கு பாடுபட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டுகிறேன்.

காரைக்காலில் புயல் பாதிப்பு குறித்து, மத்தியக்குழு ஆய்வு செய்த பிறகுதான் நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதனைதொடர்ந்து மாலை 3.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு கிரண்பெடி புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகள்