ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் 46 பேருக்கு ரூ.10¾ லட்சம் நிவாரண உதவி - அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் 46 பேருக்கு ரூ.10¾ லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

Update: 2018-11-24 23:18 GMT
தஞ்சாவூர்,

ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் 46 பேருக்கு ரூ.10¾ லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

கஜா புயலால் பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஆகிய பகுதிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது.

இதைத்தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்கிடவும், சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைத்திடவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்்தரவின்படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தஞ்சை மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகள் போர்க் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று கஜா புயலால் இறந்துபோன மற்றும் காயம் அடைந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பாதிப்புக்கு உள்ளான கால்நடை உரிமையாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதன்படி இறந்த பசுமாட்டிற்கு தலா ரூ.30 ஆயிரம், காயமடைந்த மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம், இறந்த ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், இறந்த காளை மாடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் என பாதிப்புக்கு உள்ளான 46 கால்நடை உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக கஜா புயலால் பாதிப்பு உள்ளான கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் உளூர் கிராமத்தில் நடைபெற்றது. இதனை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார் அப்போது அவர் கஜா புயலால் பாதிப்படைந்த அனைத்து கால்நடைகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அமைச்சர்கள் உடுமலை கே.ராதா கிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்