ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூரில் ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் நடந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-11-25 22:30 GMT
வேலூர், 

ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விளையாட்டு போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. வடக்கு மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.

போட்டியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு எறிபந்து, கபடி (இருபாலருக்கும்) ஆகிய போட்டிகள் நடந்தன.

இதில், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, புதுச்சேரி, சித்தூர், விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 34 அணியினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாலையில்பரிசளிப்பு விழா நடந்தது.இதில் சிறப்பு அழைப்பாளராக பா.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாலிபால், எறிபந்து, கபடி ஆகிய போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணியினருக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கினார். போட்டிகளில் முதல் 2 இடங்கள் பிடித்த அணிகள் அடுத்த மாதம் ஈரோட்டில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

விளையாட்டு போட்டிகளை காண வந்த பொதுமக்களுக்கு உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலம்போடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், டாக்டர் சிவக்குமார், ஈஷா யோகா மைய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்