பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-25 23:00 GMT
பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாகவும் பலர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 2 மகப்பேறு டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஆஸ்பத்திரிக்கு பென்னாகரம், ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் பிரசவத்திற்காக வருகின்றனர்.

ஆனால் போதிய மகப்பேறு டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் இங்கு பிரசவத்திற்கு வருபவர்களை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லை சேர்ந்த அன்புமணி என்பவருடைய மனைவி சுகந்தி (வயது 19) என்பவர் பிரசவத்திற்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் டாக்டர்கள் இல்லை எனக்கூறி அவரை நீண்ட நேரம் வளாகத்தில் உட்கார வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறும் செவிலியர்கள் கூறியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து சுகந்தியின் உறவினர்கள் அவரை தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக கொண்டு சென்றனர். இதைப் பார்த்த ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இங்கு பிரசவத்திற்கு வருபவர்களை போதிய டாக்டர்கள் இல்லை எனக்கூறி தர்மபுரிக்கு செல்லுமாறு ஊழியர்கள் கூறுகின்றனர். இங்கிருந்து தர்மபுரிக்கு 30 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். அவ்வாறு பிரசவத்திற்கு செல்லும் வழியிலேயே அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றனர். மேலும் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் மகப்பேறு டாக்டர்களை நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்