மானாமதுரை சட்ட மன்ற தொகுதியில் தேர்தல் அறிவிக்கும் முன்பாக அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம்

மானாமதுரை சட்ட மன்ற தொகுதியில் தேர்தல் அறிவிக்கும் முன்பாக விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2018-11-25 23:00 GMT

மானாமதுரை,

மானாமதுரை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே அரசியல் கட்சியினர், அரசு மற்றும் தனியார் சுவர்களில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மானாமதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 20 தொகுதிகளில் வரும் ஜனவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் தேதி குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் மானாமதுரை சட்டமன்ற தொகுதி முழுவதும் அ.ம.மு.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் எழுதும் பணியில் தீவிரமாக உள்ளனர். அரசு மற்றும் தனியார் சுவர்களில் அவர்கள் அத்துமீறி விளம்பரங்களை எழுதி வருகின்றனர்.

மேலும் விளம்பரம் எழுதும் சுவற்றின் இடத்து உரிமையாளரிடமும், அரசிடமும் உரிய அனுமதி பெறாமல் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்களை எழுதி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு சுவர்களில் விளம்பரம் எழுத கூடாது என்ற விதிமுறைகளை மீறி பலர் தங்கள் கட்சியின் விளம்பரங்களை எழுதி வருகின்றனர்.

இதுகுறித்து தட்டி கேட்கும் அதிகாரிகளை மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு மற்றும் தனியார் சுவர்களில் அத்துமீறி எழுதப்பட்ட விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்றும், விளம்பரங்களை எழுதியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்