ராமேசுவரம் கோவில் ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பொருட்கள் பறிமுதல் - கலெக்டர் எச்சரிக்கை

ராமேசுவரம் கோவில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றாவிட்டால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் எச்சரித்துள்ளார்.

Update: 2018-11-25 23:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24-ந்தேதி இரவு விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் கரைபுரண்டோடியது. ராமேசுவரத்தில் நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், மாந்தோப்பு, இந்திரா நகர், வேர்க்கோடு, சுனாமி குடியிருப்புகள், மாரியம்மன் கோவில் தெரு, முனியசாமி கோவில் பகுதி, லட்சுமண தீர்த்தம், மற்றும் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக மாவட்ட கக்டெர் வீரராகவ ராவ் ராமேசுவரம் வந்தார். கோவிலின் கீழ ரதவீதியில் இருந்து தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது ஒவ்வொரு கடை மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி எச்சரித்தார். நகராட்சி அதிகாரிகளை அழைத்து ரத வீதிகளில் குப்பை மற்றும் மணல் தேங்கியிருந்ததை சுட்டிக்காட்டி உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

நான்கு ரதவீதிகளிலும் ஆய்வு செய்த கலெக்டர் மீண்டும் கீழரத வீதிக்கு வந்தபோது கடைகளின் முன்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதை கண்டு சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2,000 வீதம் அபராதம் விதித்தார். மேலும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்தை அழைத்து இருசக்கர வாகனங்களை சாலையின் ஒருபுறமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து கீழவாசல் பகுதியில் பக்தர்கள் காலணிகளை ஆங்காங்கே கிடப்பதை கண்ட அவர் அவற்றை உடனடியாக அகற்றும்படியும், கோவில் சார்பில் பெரிய அளவில் அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெயர் சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ள ராமேசுவரத்துக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். அரசு சார்பிலும், அறநிலையத்துறை சார்பிலும் இங்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. பொதுமக்களும், பக்தர்களும் ரத வீதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நடைபாதைகளில் கடைகளின் ஆக்கிரமிப்பு இருப்பதால் அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே எக்காரணம் கொண்டும் கடைகளுக்கு முன்பாக எந்த ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. இதுகுறித்து அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இனிமேலும் இது தொடர்ந்தால் நகராட்சி அலுவலர்கள் மூலம் அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்படும். மேலும் பக்தர்களுக்காக ரத வீதிகளில் 2 இடங்களில் நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் அய்யனார், மேலாளர் உதயக்குமார், கோவில் மேலாளர் முருகேசன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம், போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி உள்பட ஏராளமான அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்