மணல் கடத்திய 12 மாட்டுவண்டிகள் பறிமுதல் - உரிமையாளர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மணல் கடத்திய 12 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Update: 2018-11-25 22:49 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி வாத்தலையை அடுத்த சிறுகாம்பூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆறு மற்றும் பெருவளை வாய்க்காலில் மாட்டு வண்டிகளில்மணல் அள்ளி கடத்தப்படுவதாக வாத்தலை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து நேற்று முன்தினம் வாத்தலை போலீசார் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் வருவதை கண்டு, அங்கு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள், வண்டிகளை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதனையடுத்து போலீசார் அந்த மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 9 மாட்டு வண்டிகளையும், பெருவளை வாய்க்காலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை சிறுகாம்பூர் பகுதியை சேர்ந்த சிலரின் உதவியுடன் போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 12 மாட்டுவண்டி உரிமையாளர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் நெ.2 கரியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்