கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு மறியல் - சங்க மாநில தலைவர் தகவல்

கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு மறியல் நடத்தப்படும் என சங்க மாநில தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-25 23:04 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்க மாநில தலைவர் கூறினார்.

தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி நெ.1 டோல்கேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தார். இதில் சங்க மாநில தலைவர் சங்கர்பாபு பேசியதாவது:- பள்ளி சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், அங்கன்வாடி பணியாளர்கள் என தமிழகத்தில் 2 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அனைவரையும் அரசு ஊழியராக்க நிதி ஆதாரம் இல்லாததால், சத்துணவு திட்டத்தில் பணியாற்றிவர்களில் பி.எட் ஆசிரியர் பயிற்சி முடித்த பணியாளர்களுக்கு அரசு கடந்த 24.3.2003-ல் சிறப்பு தேர்வு நடத்தி அதில் தகுதியான 880 பேரை அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்தது.

அங்கன்வாடி பணியாளர்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை சமூகநலத்துறையில் மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் சமுதாய ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் நிலை-2 என பணி மூப்பு அடிப்படையில் அரசு முறையான பணி நியமனம் வழங்கியது. 25 ஆண்டு சத்துணவு திட்டத்தில் பணியாற்றி 1.4.2003-க்கு பின்னர் அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்ட இவர்கள் குறைந்த ஆண்டுகள் அரசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்கள்.

சத்துணவு திட்டத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றி அரசின் நிரந்தர பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் மற்றும் ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்களுக்கு, சத்துணவுத் துறையில் பணியாற்றிய 50 சதவீதத்தை அரசின் நிரந்தர பணிக்காலத்துடன் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி சென்னையில் உள்ள சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் கரூர் மாவட்ட தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்