மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 46 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.407½ கோடி பயிர்கடன் - கலெக்டர் ஹரிகரன் தகவல்

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 46 ஆயிரத்து 244 விவசாயிகளுக்கு ரூ.407½ கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2018-11-25 22:00 GMT
கோவை,


கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கோவை மாவட்டம் திருப்பூர் சரகம் மற்றும் தாராபுரம் சரகங்களை உள்ளடக்கி ஒருங்கிணைந்த மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி பொது மக்களுக்கும் மற்றும் பலதரப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் நிதியுதவி செய்து வருகிறது. மேலும் வங்கிகளின் இணை உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து வகைக் கடன்களையும் வங்கி வழங்கி வருகிறது. அரசால் அறிவிக்கப்படும் அரசு நலத்திட்ட கடனுதவிகள் குறிப்பாக பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மேம்பாட்டிற்காக கடன்கள் வழங்கி வருகிறது. கோவை மாவட்டத்தில் 27 கிளைகளும், திருப்பூர் மாவட்டத்தில் 9 கிளைகளும் செயல்பட்டு வருகிறது.

கணினி மயமாக்குதல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு, வங்கியின் அனைத்து கிளைகளிலும் சேவை பெற்றுக் கொள்ளும் வசதி, வங்கி கிளைகளின் கணக்குகளுக்கிடையே உடனடி தொகை பரிமாற்ற வசதி, பிற வங்கிகளுக்கு உடனடி மின்னஞ்சல் தொகை பரிமாற்ற வசதி, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வரைவோலை பெற்று கொள்ளும் வசதி உள்பட பல்வேறு சேவைகள் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 16 ஆயிரத்து 430 விவசாயிகளுக்கு ரூபே அட்டை கள் வழங்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக, 14 ஆயிரத்து 159 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 2017-2018-ம் ஆண்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவியாக 78 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு ரூ.950 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் தமிழக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 39 ஆயிரத்து 647 பயனாளிகளுக்கு ரூ.210 கோடியே 66 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 46,244 பயனாளிகளுக்கு ரூ.407 கோடியே 62 லட்சம் பயிர் கடனாகவும், 3 ஆயிரத்து 414 பயனாளிகளுக்கு ரூ.32 கோடியே 22 லட்சம் மத்திய கால கடனாகவும், 12 ஆயிரத்து 64 பயனாளிகளுக்கு ரூ.197 கோடியே 89 கோடி நகை கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், 2013-14-ம் நிதியாண்டில் ரூ.9.35 கோடியும், 2014-15-ம் நிதியாண்டில் ரூ.2.93 கோடியும், 2015-16-ம் நிதியாண்டில் ரூ.7.17 கோடியும், 2016-17-ம் நிதியாண்டில் ரூ.7.80 கோடியும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ.9.18 கோடி லாபம் பெறப்பட்டுள்ளது.

64-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விருது பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டு மாநில அளவில் உழவர் கடன் வழங்குதல் மற்றும் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தமிழக அரசிடம் இருந்து விருது பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்