நீடாமங்கலம் அருகே: புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

நீடாமங்கலம் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-25 22:00 GMT
நீடாமங்கலம், 

‘கஜா’ புயல், மழை காரணமாக நீடாமங்கலம் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. நேற்று 10-வது நாளாக மின் வினியோகம் இல்லை.

கிராம மக்களின் அன்றாட தேவைகளுக்கான நிவாரண பொருட்களும் கிடைக்கவில்லை. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ஒரு சில கிராமங்களில் மட்டுமே ஜெனரேட்டர்கள் உதவியுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் கிராமத்தில் மின்சாரம், குடிநீர், நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.

இதுபற்றி தகவலறிந்த நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையர் ஜூலியெட்ஜெயசிந்தாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி உள்ளிட்டோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக நீடாமங்கலம்-தேவங்குடி, நீடாமங்கலம்-பொதக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மேலும் செய்திகள்