மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூலம் 14,505 கர்ப்பிணிகள் பயன் பெற்றுள்ளனர் கலெக்டர் பிரபாகர் தகவல்

மாவட்டத்தில் 1,796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 14,505 கர்ப்பிணிகள் பயன் பெற்றுள்ளதாக கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-26 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1,796 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 64 மையங்கள் நகராட்சி பகுதியிலும், 53 மையங்கள் பேரூராட்சி பகுதியிலும், 1,679 மையங்கள் ஊரகப்பகுதியிலும் இயங்கி வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் 14,505 கர்ப்பிணிகளும், 12,870 பாலூட்டும் தாய்மார்களும், 39,201 குழந்தைகளும், இணை உணவு பெற்று பயனடைந்து உள்ளனர். மேலும் 46,116 குழந்தைகள் முன்பருவக்கல்வி மற்றும் மதிய உணவு பெற்று வருகின்றனர்.

அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகளை பதிவு செய்து எடை, இணை உணவு, சமுதாய வளைகாப்பு, ஊட்டசத்து குறித்த கல்வி, 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க அறிவுறுத்துதல், 7-வது மாதம் முதல் இணை உணவு போன்ற சேவைகளும், வளர் இளம் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை கல்வி, ஊட்டச்சத்து ஆகிய சேவைகள் அளிக்கப்படுகின்றன. சுகாதார கல்வி, இரும்புச்சத்து மாத்திரை மற்றும் வயிற்றுப்பூச்சி நீக்க மருந்து, 11-14 வயதுடைய பள்ளி செல்லாத வளர் இளம் பெண்களுக்கு இணை உணவு, குழந்தைகளுக்கு எடை, முன் பருவகல்வி, மதிய உணவு போன்ற சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,796 அங்கன்வாடி மையங்களுக்கும் அரசால் முன்பருவக்கல்வி உபகரணங்கள், ஆரம்ப நிலையில் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி அளிப்பதற்கான உபகரணங்கள், செயல்பாட்டு புத்தகங்கள், கொசுவலை, முதலுதவிப்பெட்டி, தகவல் பலகை, பாய்கள், சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் முகம் பார்க்கும் கண்ணாடி, அடிப்படை மருத்துகள், அசைந்தாடும் நாற்காலி, பாடங்களுக்கான கையேடுகள், பட அட்டைகள், கதை தொகுப்பு அட்டைகள் போன்ற பொருட்கள் வழங்கப்்பட்டு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்