“புயல் நிவாரண பணியை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

“புயல் நிவாரண பணியை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2018-11-26 22:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தவறான கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து வருகிறார். அவர் இன்னும் நடிகராகவே உள்ளார். அவர் அரசியல்வாதியாக மாறவில்லை. ‘கஜா‘ புயல் எச்சரிக்கை விடப்பட்டதும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால்தான், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

இதனால் தமிழக அரசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து புயல் சேத நிவாரணத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி வழங்குமாறு கேட்டுள்ளார். தொடர்ந்து மத்திய குழுவினர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர். புயல் நிவாரண பணிகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இயற்கை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். இதில் மத்திய அரசு இணக்கமான முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்