நெல்லையில் அரசாணை நகலை எரித்து ஆசிரியர்கள் போராட்டம் மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் வழங்க கோரிக்கை

மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் வழங்க கோரி நெல்லையில் ஆசிரியர்கள் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-26 22:45 GMT
நெல்லை, 

பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக மாநில அரசு ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரசாணை நகல் எரிப்பு போராட்டம் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆங்காங்கே நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரமநாயகம் முன்னிலை வகித்தார். துணை தலைவர் அமுதன் வரவேற்று பேசினார். போராட்டத்தில் கலந்து கொண்ட சில ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். சிலர் பட்டை நாமம் போட்டு இருந்தனர். சிலர் வேல் ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் பால்ராஜ் பேசுகையில், “மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும், தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தில் ஒரு மாதத்துக்கு ரூ.14 ஆயிரத்து 800 வித்தியாசம் இருக்கிறது. இதுகுறித்து அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்து விட்டோம். பலமுறை போராட்டங்கள் நடத்தி விட்டோம். ஆனால் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. வேறு வழியில்லாமல் இந்த அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடத்துகிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். மாநில குழு எடுக்கும் முடிவின்படி அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்“ என்றார்.

தொடர்ந்து மாநில தலைவர் மணிமேகலை போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அரசாணை நகலை ஆசிரியர்கள் தீவைத்து கொளுத்தினர்.

முன்னதாக, அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குமாரவேல், மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் துரைசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் முருகேசன் போராட்டத்தை முடித்து வைத்தார். இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்