திண்டிவனம் அருகே: விவசாயி, விஷம் குடித்து சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை-மகன் மீது வழக்கு

திண்டிவனம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை-மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-11-27 22:00 GMT
திண்டிவனம், 


திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் பொன்னுசாமி(வயது 28), விவசாயி. இவருக்கு கோகிலா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். சம்பவத்தன்று பொன்னுசாமிக்கும், பக்கத்து வயலை சேர்ந்த உறவினரான பெருமாள்(68), என்பவருக்கும் இடையே விளை நிலத்தில் வரப்பு வெட்டுவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பெருமாள் மற்றும் அவரது மகன் குப்புசாமி(30) ஆகிய 2 பேரும் சேர்ந்து பொன்னுசாமியை திட்டி, தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பொன்னுசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பொன்னுசாமி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னுசாமியின் தாய் மல்லிகா ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் பெருமாள், குப்புசாமி ஆகிய 2 பேரும் தாக்கியதால் தான் எனது மகன் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆகவே எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்அடிப்படையில் பொன்னுசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக பெருமாள், குப்புசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்