அடிப்படை வசதிகள் கோரி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

அடிப்படை வசதிகள்கோரி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-27 22:32 GMT
ஸ்ரீரங்கம்,

திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து கடந்த 2017-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற அமைதிபேச்சுவார்த்தையில் ஒரு மாதத்துக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முடிவானது. ஆனால் இதுநாள் வரை எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இதனை கண்டித்தும் பேச்சுவார்த்தையின்படி அடிப்படை வசதிகளை உடனே செய்து தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழுவினர் களஞ்சியம் பகுதி மக்களுடன் இணைந்து நேற்று ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா பேசினார். போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் களஞ்சியம் பகுதி பொதுமக்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் ஷேக்அயூப் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தெருவிளக்கு அமைக்க இடத்தை ஆய்வு செய்வது. லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவது. ஆதார் கார்டு வழங்கும் நபருக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பது என முடிவானது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் இளநிலை பொறியாளர் பாலமுருகன், ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அழகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், களஞ்சியம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்