கடலூர், விருத்தாசலத்தில்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர், விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-27 22:30 GMT
கடலூர், 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு வட்ட செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், அமாவாசை, வடிவேல், நாகராஜ், பாக்கியம், வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட செயலாளர் மணிவாசகம், மாநிலக்குழு குளோப், வட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். கஜா புயல் இழப்பீடு நிதியாக தமிழக அரசு கோரியுள்ள ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மாவட்ட கலெக்டரை அடிக்கடி மாற்றி நிர்வாகத்தை முடக்காதே என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் நகர செயலாளர் அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதேபோல் விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் விஜயபாண்டியன், துணை செயலாளர் கேசவபெருமாள், நகர பொருளாளர் நடராஜன், ராவணராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும், ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தில் 3 மாதங்களாக தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு கூலி வழங்காததை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு நிர்வாகி பெரியசாமி, மாவட்ட குழு நிர்வாகிகள் பட்டுசாமி, தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்