பழனி அருகே: மக்காச்சோள பயிர்களை நாசப்படுத்திய காட்டுயானைகள்

பழனி அருகே, மக்காச்சோள பயிர்களை காட்டுயானைகள் நாசப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2018-11-28 22:00 GMT
பழனி, 

பழனியை அடுத்த கோம்பைப்பட்டி மலையடிவார பகுதிகள் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு உட்பட்டதாகும். இங்குள்ள வனப்பகுதியில் யானை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில நாட்களாக 4 காட்டுயானைகள், இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் சுற்றித்திரிவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு வந்த 4 யானைகள், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் நிலத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை நாசப்படுத்திவிட்டு அதிகாலையில் வனப்பகுதிக்கு திரும்பி சென்றுவிட்டன.

இதுகுறித்து விவசாயி ஆறுமுகம் கூறுகையில், நான் 1½ ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தேன். தப்போது ஒரு ஏக்கர் அளவில் யானைகளால் சேதம் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் மக்காச்சோள பயிர்கள் நாசமானதால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவை பயிர்களை நாசப்படுத்துவதால் நாங்கள் கவலையில் உள்ளோம். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்துடனே இருக்கிறோம். எனவே ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்