திருச்சியை சேர்ந்த 30 பேரிடம் கைவரிசை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.22 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக திருச்சியை சேர்ந்த 30 பேரிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-11-28 22:15 GMT
திருச்சி,

திருச்சி தில்லைநகர் 7-வது குறுக்குத்தெருவில் டிராவல்ஸ் மற்றும் பார்சல் சர்வீஸ் நிறுவனங்கள் நடத்தி வருபவர் ஷாஜகான். இவர், குவைத் உள்பட வெளிநாடுகளில் வேலை காலியாக இருப்பதாகவும், அங்கு வேலைவாய்ப்பு இருப்பதால் உரியதொகை செலுத்தினால் வேலை நிச்சயம் என வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

அதை நம்பி திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பலர் ஷாஜகானை சந்தித்து விவரம் கேட்டனர். அதற்கு அவர், குவைத் நாட்டில் வேலை வாங்கி தருவதற்கான உத்தரவாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு உடந்தையாக மணிவண்ணன் என்பவரும் இருந்துள்ளார்.

அதை நம்பி திருச்சி ஏர்போர்ட் காமராஜ்நகர் திலகர் தெருவை சேர்ந்த ரெங்கராஜன் மகன் அப்புக்குட்டி(வயது36) உள்பட 30 பேர் குவைத் நாட்டில் வேலைக்காக ஷாஜகான் நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்று கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ரூ.22 லட்சம் கட்டினர்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி வேலைக்கான முயற்சியை ஷாஜகான் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வேலைக்காக பணம் செலுத்திய அப்புக்குட்டி உள்பட 30 பேரும், தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தாங்கள் கொடுத்த ரூ.22 லட்சத்தையும் டிராவல்ஸ் அதிபர் ஷாஜகான் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் மோசடி செய்து விட்டதாகவும், பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து அப்புக்குட்டி உள்பட 30 பேரும் மனு கொடுத்தனர்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாநகர குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில், மோசடி குற்றம்சாட்டப்பட்ட ஷாஜகான், மணிவண்ணன் ஆகியோர் மீது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தார்.

தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்