மூதாட்டி கொலை வழக்கில் புரோட்டா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மூதாட்டி கொலை வழக்கில் புரோட்டா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2018-11-29 22:00 GMT
சேலம், 

கேரள மாநிலம் குருவாயூரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 53). இவர் சேலம் கோரிமேடு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இதற்காக கோரிமேடு கே.கே.நகரில் தங்கி இருந்தார். இந்த ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக தர்மபுரி மாவட்டம் தொப்பூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (47) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டலிலேயே தங்கி இருந்தார்.

இதனிடையே கோரிமேடு பகுதியில் சுற்றித்திரிந்த ஜாகீர்அம்மாபாளையத்தை சேர்ந்த சரசு (65) என்ற மூதாட்டியும் அந்த ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

அப்போது சரசு மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் இரவு நேரத்தில் ஒன்றாக சேர்ந்து மது குடித்து வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த ஓட்டலின் ஒரு அறையில் தங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி இரவு ரவிச்சந்திரன், மூதாட்டி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் சரசுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். இதையடுத்து அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் மூதாட்டியை கொலை செய்த ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்