தேனி அருகே பரபரப்பு: பா.ஜ.க. நிர்வாகி காருக்கு தீ வைப்பு? - போலீசார் விசாரணை

தேனியில் பா.ஜ.க. நிர்வாகி கார் தீப்பிடித்து எரிந்தது. யாரும் தீ வைத்தார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-11-29 22:45 GMT
தேனி,

தேனியை அடுத்துள்ள அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் சிவக்குமார் (வயது 32). இவர் பா.ஜ.க. தேனி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இவர் தனது காரை அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் போஸ்ராஜா என்பவரிடம் பராமரிப்பு செய்வதற்காக கொடுத்து இருந்தார்.

அவர் காரை பராமரிப்பு செய்து தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென இந்த காரின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து சிவக்குமாருக்கு போஸ்ராஜா தகவல் கொடுத்தார். மேலும் காரில் பிடித்த தீயை போஸ்ராஜா அணைத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரை பார்வையிட்டனர். பின்னர் அந்த காரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காருக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறதா? என்று போலீசார் பார்வையிட்டனர். ஆனால், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே முல்லைநகர் பகுதியில் உள்ள ஒருஆசிரமத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், பா.ஜ.க. நிர்வாகி காரில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்