குன்னம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு மாட்டை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

குன்னம் அருகே மாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-11-29 22:15 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள க.எறையூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 60). விவசாயியான இவர் நேற்று மதியம் தனது மாட்டை அருகில் உள்ள வயலில் மேய்ப்பதற்காக ஓட்டிச்சென்றார். அப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. மாடு வயல் பகுதியில் இருந்த மின் கம்பத்தை தாங்கி பிடிப்பதற்காக இழுத்து கட்டப்பட்டிருந்த கம்பியில் உரசியது. அப்போது மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து மாடு துடிதுடித்துக்கொண்டு இருந்தது. இதை அறிந்த சுப்பிரமணி செய்வது அறியாமல் காப்பாற்றும் முயற்சியில் மாட்டை இழுத்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியும், அவரது மாடும் இறந்தது.

போலீசார் விசாரணை

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வந்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்