சிறை கைதி மர்ம சாவு: பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

சிறை கைதி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2018-11-29 22:30 GMT
புதுச்சேரி,

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி(21). இவர் பாகூர் போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே அதாவது கடந்த 27-ந் தேதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயமூர்த்தி இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்து ஜெயமூர்த்தியின் உறவினர்கள் அரசு பொதுமருத்துவமனையை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ஜெயமூர்த்தி சாவில் மர்மம் இருப்பதாகவும், பாகூர் போலீஸ் நிலையத்தில் தாக்கப்பட்டதால் தான் அவர் இறந்ததாகவும் புகார் தெரிவித்தனர். இதனால் ஜெயமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காமல் திடீர் முற்றுகை உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையொட்டி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா நேற்று முன்தினம் பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் அதேபோலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருமால் என்பவரும் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலகம் பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்