புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-11-29 22:30 GMT
பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள், தென்னை சார்ந்த தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை மாவட்ட பா.ஜனதா தலைவர் பண்ணைவயல் இளங்கோ தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

மத்திய அரசுக்கு இந்த பகுதியின் நிலைமை பற்றி மிக உருக்கமான தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். மறுவாழ்வுக்கான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, “டெல்டாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளேன். அரசு உங்கள் பக்கம் இருக்கிறது. விவசாயிகள் மன பலத்தை இழந்து விடக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து உங்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தும்” என கூறினார்.

கூட்டத்தில் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

விவசாயத்தின் அனைத்து வகையான பாதிப்புகளையும் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சந்தித்து உள்ளனர். விவசாயிகளின் உணர்வுகள் புரிகிறது. மத்திய, மாநில அரசுகள் குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கும்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கட்சி, சாதி, மத, பேதமின்றி நிவாரணம் வழங்கப்படும். எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழக அரசு புயலுக்கு முந்தைய உயிர்காக்கும் நடவடிக்கைகளில் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு தென்னை மரத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கேட்கின்றனர். அண்மையில் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடித்து செல்லப்பட்டபோது, கம்யூனிஸ்டுகள் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்களா? நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவற்றை கேட்கக்கூடாது. குறைந்தபட்சம் தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும், மறுசீரமைப்பு செய்ய தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் எல்லாவற்றையும் இழந்தாலும் நம்பிக்கையை இழக்க கூடாது. இந்த பகுதியில் இதை விட இரண்டு மடங்கு தென்னை விவசாயத்தை நம்மால் செய்ய முடியும். ஒரு தென்னைக்கு ரூ.7,500 வரை காப்பீடு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்