கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மீண்டும் தனி ரெயிலாக இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நேற்று முதல் மீண்டும் தனி ரெயிலாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2018-11-29 23:00 GMT
நாகர்கோவில்,

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கடந்த 15-ந் தேதி முதல் கொச்சுவேளிக்கு பாசஞ்சர் ரெயிலாகவும் இயக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கு குமரி மாவட்ட பயணிகளும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டமும் நடத்தப்பட்டது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் நடந்த ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு பாசஞ்சர் ரெயிலாக இயக்குவதை கைவிடுவது எனவும், தனி ரெயிலாக கன்னியாகுமரி எக்ஸ்பிரசை இயக்குவது எனவும் முடிவு செய்தனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி நேற்றுமுன்தினம் உத்தரவு அமலாகவில்லை. வழக்கம்போல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கொச்சுவேளிக்கு பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்டது. இது குமரி மாவட்ட பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி பிரமுகர்களும் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதையறிந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ரெயில்வே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதிகாரிகள், 29-ந் தேதி (அதாவது நேற்று) முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தனி ரெயிலாக இயக்கப்படும் என்று அவரிடம் உறுதி அளித்தனர். அதன்படி நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேளிக்கு மாற்று ரெயில் இயக்கப்பட்டது. மாலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மீண்டும் தனி ரெயிலாக சரியான நேரத்துக்கு இயக்கப்பட்டது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அந்த ரெயிலில் பயணம் செய்த நாகர்கோவில் டெரிக் பகுதியை சேர்ந்த ஜெசி என்ற பெண் கூறுகையில், மீண்டும் தனிரெயிலாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் சரியான நேரத்துக்கு சென்னை செல்ல முடியும். காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கலாம். அதே சமயத்தில் ரெயிலை சுத்தம் செய்வதற்கு ஊழியர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். இதனால் ரெயிலும் சுத்தமாக இருக்கும். கன்னியாகுமரி எக்ஸ்பிரசை மீண்டும் தனி ரெயிலாக இயக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

நாகர்கோவிலை சேர்ந்த ஜோஸ் ராபி வில்சன் என்பவர் கூறுகையில், என்னுடைய பணி காரணமாக அடிக்கடி சென்னைக்கு செல்வேன். சரியான நேரத்துக்கு செல்வதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வதைத்தான் வழக்கமாக வைத்திருந்தேன். ஆனால் கொச்சுவேளிக்கு பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்டதில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னைக்கு காலையில் தாமதமாகவே சென்றது. இதனால் என்னை போல் பலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தனி ரெயிலாக இயக்கப்பட்டதால் காலதாமதம் ஏற்படாமல் பயணிகள் சென்னைக்கு செல்ல முடியும். தனி ரெயிலாக இயக்கும் முடிவு தொடர வேண்டும். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால், குமரியை மதுரை ரெயில்வே கோட்டத்தோடு இணைக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்