ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வெளியான தியேட்டர் முன்பு வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது

பெங்களூருவில், ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வெளியான தியேட்டர் முன்பு வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

Update: 2018-11-29 23:45 GMT
பெங்களூரு,

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கர்நாடகத்திலும் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் அதிக திரையரங்குகளில் அந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு லால்பாக் ரோட்டில் 2.0 படம் வெளியான ஊர்வசி தியேட்டர் முன்பு கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவா் வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவரது கட்சியினர் கலந்து கொண்டனர்.

அப்போது 2.0 படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். அதற்கு முன்பு வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2.0 படம் சென்னையை விட பெங்களூருவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன. இதுேபான்ற பிறமொழி படங்களுக்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குவதால், கன்னட படங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் தான் திரையரங்குகள் கிடைக்கின்றன. இதனால் கன்னட படங் களின் நிலை என்ன ஆகும்?.

கர்நாடக திரைப்பட வர்த்தகசபை நிர்வாகிகள் அலட்சிய போக்குடன் செயல்படுகிறார்கள். இது சரியல்ல. இதுபற்றி அவர்கள் சற்று யோசிக்க வேண்டும். கன்னட திரைப்பட விநியோகஸ்தர்களில் பலர் பிறமொழியினர் இருக்கிறார்கள்.

வருகிற 1-ந் தேதிக்குள் (நாளை) 2.0 படத்தை எடுத்துவிட்டு கன்னட படங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திரைப்பட வர்த்தகசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. அங்கு வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன.

சாமானிய மக்கள், பெரிய வணிக வளாகங்களுக்கு சென்று அதிக கட்டணம் செலுத்தி படம் பார்க்க முடியுமா?. இந்த நிலையை தடுக்காவிட்டால், கன்னட திரைப்படத்துறை கடுமையாக பாதிக்கும். இதை இங்கு உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்