மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 66 மில்லி மீட்டர் பதிவு

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

Update: 2018-11-29 21:30 GMT
கடலூர், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இந்த மழை கடலூர் மாவட்டத்திலும் பரவலாக பெய்தது. சமீபத்தில் வங்க கடலில் உருவான கஜா புயல் கடலூரை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், அது நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை பதம் பார்த்தது.

அதைத்தொடர்ந்து வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதற்கிடையே வியட்நாம், தாய்லாந்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அது மேற்கு நோக்கி நகர்ந்து கஜா புயல் உருவான அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. அப்படி மாறினால், 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரமே நீடித்தது. அதன்பிறகு மழை இல்லை. அதன்பிறகு அதிகாலை 3 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று காலை 9 மணி வரை விட்டு, விட்டு பெய்தது.

இந்த மழையினால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் நனைந்தபடியும், குடைபிடித்த படியும் நடந்து சென்றனர். சிலர் மழை கோட்டு அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்ந்து விட்டு, விட்டு மாலை வரை மழை பெய்தது. இதேபோல் சிதம்பரம், புவனகிரி, லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

குறைந்தபட்சமாக வேப்பூரில் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

அண்ணாமலைநகர்- 61, சிதம்பரம்- 53, பரங்கிப்பேட்டை- 52, சேத்தியாத்தோப்பு - 51, புவனகிரி- 45, கொத்தவாச்சேரி - 41, லால்பேட்டை - 41, காட்டுமன்னார்கோவில் - 40, கடலூர்- 27.70, ஸ்ரீமுஷ்ணம்- 27.20, கலெக்டர் அலுவலகம்- 25.20, குப்பநத்தம் - 22.80, பெலாந்துறை- 20.60, வடக்குத்து - 16, விருத்தாசலம் - 16, மே.மாத்தூர் - 12, கீழ்செறுவாய் - 5, பண்ருட்டி - 2.80. 

மேலும் செய்திகள்