செல்போன் கடை ஊழியரை தாக்கி ரூ.60 லட்சம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது ரூ.35 லட்சம் பறிமுதல்

சென்னை ஏழுகிணறு பகுதியில் செல்போன் கடை ஊழியரை கட்டையால் தாக்கி ரூ.60 லட்சம் பறித்துச்சென்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-11-30 22:45 GMT
பிராட்வே,

சென்னை மாடிப்பூங்கா வெங்கட்ராமன் தெருவில் ஆன்-லைன் மூலம் செல்போன் விற்பனை செய்யும் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை ஜாபர் (வயது 35) என்பவர் நடத்தி வருகிறார். இவரின் கடையில் ஏழுகிணறு பாளையப்பன் தெருவை சேர்ந்த ரபிகான் (36) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு ஏழுகிணறு பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் கொடுப்பதற்காக ரூ.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு ரபிகான் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆணைக்கார கோனார் தெரு- பெரியண்ணா தெரு சந்திப்பு பகுதியில் வந்தபோது 3 பேர் அவரை வழிமறித்து கட்டையால் தாக்கி ரூ.60 லட்சத்தை பறித்துச்சென்றனர்.

இதுபற்றி ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கொடுங்கையூரை சேர்ந்த கிஷோர் (24), பொன்னேரியை சேர்ந்த சதீஷ் (28), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தாவூத் (42) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.9½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான செங்குன்றம் பகுதியை சேர்ந்த முத்துசரவணன் (27) என்பவரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் முத்துசரவணன் தங்கசாலை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று முத்துசரவணனை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்