தனது மகனின் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற நடிகர் அம்பரீசின் விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது மனைவி சுமலதா கண்ணீர் மல்க பேச்சு

தனது மகனின் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற நடிகர் அம்பரீசின் விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது என்று அவரது மனைவி சுமலதா கண்ணீர் மல்க உருக்கமாக கூறினார்.

Update: 2018-11-30 22:30 GMT
பெங்களூரு,

மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவஞ்சலி கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அம்பரீசின் மனைவி நடிகை சுமலதா கண்ணீர் மல்க பேசியதாவது:-

அம்பரீஷ் எனக்கு நண்பராக இருந்தார். கணவராக, தந்தையாக, சகோதரராக, குருவாக இருந்து வழிகாட்டினார். அவரை பற்றி பேச என்னிடம் வார்த்தைகளே இல்லை. அவர் எங்கு இருந்தாலும் சிரித்தபடியே எனக்கு ஆசி வழங்குவார்.

நடிகர் அம்பரீஷ் எனக்கு மட்டும் சொந்தமில்லை, அவர் அனைவருக்கும் சொந்தமானவர். அவருக்கு மண்டியா மக்கள் என்றால் உயிர். அவரது உடலை மண்டியாவுக்கு எடுத்துச் சென்று, மக்களின் தரிசனத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது என்னால் மறக்க முடியாது.

முதல்-மந்திரி குமாரசாமி தனது வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 3 நாட்கள் உடன் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதி ஊா்வலம் அமைதியான முறையில் நடைபெற தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

திரைத்துறை, ஊடகங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அம்பரீஷ், மகாராஜாவை போல் வாழ்ந்தார். மகாராஜாவை போலவே இந்த உலகை விட்டு சென்றுள்ளார். தனது மகனின் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அம்பரீசுக்கு இருந்தது.

அவருடைய அந்த விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது. அம்பரீஷ் மீது மக்கள் வைத்திருந்த அன்பு, அபிஷேக் மீது இருக்கட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சுமலதா பேசினார்.

மேலும் செய்திகள்