ரெட்டிபாளையத்தில் ரேஷன் கடை இடமாற்றத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ரெட்டிபாளையத்தில் ரேஷன் கடை இடமாற்றத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-11-30 22:51 GMT
வி.கைகாட்டி,

அரியலூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் ரெட்டிபாளையம் கிராமத்திற்கு அருகில் உள்ள சந்திரபாளையம் மயிலாண்டக்கோட்டை உள்ளிட்ட 4 கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடை இயங்கி வந்த கட்டிடம் பழுதடைந்ததை அடுத்து இக்கடையை அருகில் உள்ள மயிலாண்டக்கோட்டை கிராமத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரெட்டிபாளையம் கிராம மக்கள் எங்கள் கிராமத்தில் இயங்கிவந்த ரேஷன் கடையை மாற்ற கூடாது என வலியுறுத்தி அப்பகுதியில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன் கடையை வேறு கிராமத்தில் மாற்றக்கூடாது எனவும், மாற்று இடத்தில் ரேஷன் கடை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அருகில் உள்ள சந்திரபாளையம், நாயக்கர்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் உள்ளதால் இதனை மாற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ரேஷன் கடையை மாற்ற மட்டுமே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வேறு கட்டிடம் கிடைத்தால் பக்கத்திலேயே ரேஷன் கடை இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்