புதுக்கோட்டையில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

புதுக்கோட்டையில் கலெக்டர் கணேஷிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீண்டநேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-30 23:12 GMT
புதுக்கோட்டை ,

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு, ஆயிங்குடி, கீரமங்கலம், செரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் தனியார் நிதி நிறுவனங்களில் தாங்கள் வாங்கிய கடனை புயல் காரணமாக கட்டமுடியாததால், காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறி கலெக்டர் கணேஷிடம் மனு அளிப்பதற்காக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அப்போது கலெக்டர் கணேஷ் நான் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று விட்டு, வந்து உங்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்கிறேன் எனக்கூறிவிட்டு சென்று விட்டார்.

இதையடுத்து மனு கொடுக்க வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தின் 2-வது மாடியில் தரையில் அமர்ந்து நீண்டநேரம் காத்திருந்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் கணேஷ், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை முடித்துவிட்டு வந்து, பெண்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இது குறித்து மனு கொடுக்க வந்த மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த கோகிலா கூறுகையில், நாங்கள் தனியார் நிதி நிறுவனங்களில் கடனை பெற்று தவணை முறையில் செலுத்தி வந்தோம். நாங்கள் அவர்களிடம் கடன் வாங்கும்போது, தொகைக்கு ஏற்றார்போல் எங்களிடம் இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் புயல் தாக்கியதால், எங்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் எங்களிடம் கடனை வசூல் செய்ய வருபவர்கள் எங்கள் வீட்டில் வந்து அமர்ந்து கொண்டு, கடன் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையென்றால், நீங்கள் கொடுத்த ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து நீங்கள் வேறு எங்கும் கடன் பெற முடியாதவாறு செய்துவிடுவோம் எனக்கூறுகின்றனர்.

இது தொடர்பாக நாங்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தோம். மனுவை பெற்றுக்கொண்ட அவர், நீங்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் வாங்கிய கடனை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் கடிதம் அனுப்பி விடுகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்தால், நீங்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். அப்படி அறிவிக்கப்படவில்லை என்றால், நீங்கள் 6 மாதம் கழித்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என எங்களிடம் கலெக்டர் கணேஷ் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்