திருவட்டார் அருகே பெண் கொலை: கள்ளக்காதலன் கைது; பரபரப்பு வாக்குமூலம்

திருவட்டார் அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2018-11-30 23:56 GMT
திருவட்டார்,

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லில்லிபாய் (வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லில்லிபாய் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ந் தேதி காலையில் வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில், மறுநாள் திருவட்டார் அருகே செட்டிசார்விளையில் சிற்றார்பட்டணம் கால்வாயில் லில்லிபாய் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார், பிணத்தை கைப்பற்றி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், லில்லிபாய்க்கும், குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியில் ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடை நடத்தி வரும் ராஜேஷ்குமார் (37) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அவர் லில்லிபாயை காரில் கடத்தி சென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்று பிணத்தை கால்வாயில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- எனக்கும், லில்லிபாய்க்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட போதெல்லாம் லில்லிபாய் பணம் கொடுத்து உதவி செய்தார். அவரிடம் இருந்து 7 பவுன் தாலி சங்கிலி, 1 பவுன் காப்பு ஆகியவற்றை வாங்கி அடகு வைத்தேன். அந்த நகையை என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை. ஆனால், அவர் நகையை திரும்ப கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்தார். இதனால், அவரை காரில் கன்னியாகுமரிக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தேன்.

பின்னர், பிணத்தை திருவட்டார் அருகே கால்வாயில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து வீசி விட்டு சென்றேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து லில்லிபாயை அழைத்து சென்ற காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் காரை கொடுத்து உதவிய நண்பரை போலீசார் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர்.

லில்லிபாயின் பிணத்தை ராஜேஷ்குமார், கால்வாயில் வீசும் போது அவரது செல்போனை துப்பட்டாவில் சுற்றி கல்வாயில் வீசியுள்ளார். அந்த செல்போன் கால்வாயில் குளிக்க சென்ற ஒரு சிறுவன் கையில் சிக்கியது. அதை சிறுவன் தனது தந்தையிடம் கொடுத்தார். அவர் அந்த செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். அதையும் போலீசார் கைப்பற்றினர். அத்துடன், சிறுவனையும், அவனது தந்தையையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி விட்டு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்