சிறுபாக்கத்தில் மனுநீதிநாள் முகாம்: 260 பேருக்கு ரூ.91 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்

சிறுபாக்கத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் அன்புசெல்வன் 260 பேருக்கு ரூ.91½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2018-11-30 22:00 GMT
சிறுபாக்கம், 

வேப்பூர் வட்டம் சிறுபாக்கத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். கணேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் வரவேற்றார்.

இதில் பட்டா மாற்றம், வீட்டுமனை, தையல் எந்திரம், முதியோர் மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அவற்றில் 260 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அன்புசெல்வன், 260 பயனாளிகளுக்கு ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 573 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அனைவரும் முன்வர வேண்டும். கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பதுடன், தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவேண்டும். ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் கழிப்பறை கட்டுவதோடு, அதனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகள் பொதுமக்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தொழில் தொடங்க தாட்கோ மூலம் கடனுதவி பெற்று, வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்படும் என்றார்.

முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், தனித்துணை ஆட்சியர் பரிமளம், வேளாண்மை இணை இயக்குனர் அண்ணாதுரை, மருத்துவத்துறை இணை இயக்குனர் கலா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதா, தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜாமணி, தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், ஜெயக்குமாரி, வேளாண் உதவி இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வன், நில அளவர் நந்தகோபால், வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வேப்பூர் தாசில்தார் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்