வேலூரில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்

வேலூரில் நடந்த எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-01 22:15 GMT

வேலூர்,

உலகம் முழுவதும் எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1–ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்தாண்டிற்கான எய்ட்ஸ் தினம் நேற்று நடந்தது. இதையொட்டி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சத்துவாச்சாரி சாலை, கோர்ட்டு சாலை வழியாக வந்து மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், நர்சிங் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு ‘உடல் பரிசோதனை செய்வோம், எய்ட்ஸை கண்டறிவோம், எய்ட்ஸ் இல்லாத உலகத்தை உருவாக்குவோம், எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்கக்கூடாது, தீய பழக்கத்தை கைவிடுவோம்’ என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக கலெக்டர் ராமன், எய்ட்ஸ் ஒழிப்பு குறித்து உறுதிமொழி வாசிக்க, அதனை மாணவ–மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். இதில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காயிதே மில்லத் அரங்கில் சமபந்தி விருந்து நடந்தது. இதில், கலெக்டர் ராமன் கலந்து கொண்டு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமர்ந்து உணவருந்தினார்.

மேலும் செய்திகள்