கஜா புயல் பாதிப்பை பார்வையிட்டு: கமல்ஹாசன் அரசியல் விளம்பரம் தேடுகிறார்- தர்மபுரியில் அர்ஜூன் சம்பத் பேட்டி

கஜாபுயல் பாதிப்பை பார்வையிட்டு கமல்ஹாசன் அரசியல் விளம்பரம் தேடுகிறார் என்று தர்மபுரியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2018-12-01 22:45 GMT

தர்மபுரி,

இந்து மக்கள் கட்சியின் தர்மபுரி மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கஜாபுயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மற்ற அமைப்புகளை விட ரஜினி மக்கள் மன்றத்தினர் சிறப்பான முறையில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கஜா புயல் பாதிப்பை நேரில் பார்வையிடும் கமல்ஹாசன் அதன்மூலம் அரசியல் விளம்பரம் தேடுகிறார். ரஜினிகாந்திற்கு அந்த அவசியம் இல்லை. கஜாபுயல் பாதிப்பிற்கு உதவுமாறு மத்திய அரசிற்கோ, ஆந்திரா, கர்நாடக மாநில முதல்–மந்திரிகளுக்கோ கடிதம் எழுதாத கமல்ஹாசன் கேரளமாநில முதல்–மந்திரி பிரனாய்விஜயனுக்கு கடிதம் எழுதுகிறார். இதுபோல் மலிவான விளம்பரம் தேடுவது அவருடைய வழக்கம்.

சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்து நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் அவதூறாக பேசி உள்ளார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை தடுக்க தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுக்கவேண்டும். சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

காதல் திருமணம் என்பது இருவரின் தனிப்பட்ட குடும்ப பிரச்சினை. இதை சமூக பிரச்சினையாக மாற்றி ஆணவ படுகொலைகளை தூண்டும் போக்கு அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது. சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய பொன்மாணிக்கவேலுக்கு ஐகோர்ட்டு பணிநீட்டிப்பு வழங்கியிருப்பது வரவேற்கதக்கது. அவரை இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக நியமித்தால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் ராஜாஜி, மாவட்ட பொருளாளர் ராஜா, கோட்டபொறுப்பாளர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்