பண்ணந்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

பண்ணந்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2018-12-01 22:30 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள பாப்பாரப்பட்டி கிராமத்தில் அரிச்சந்திரன் கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலை புதுப்பித்து கடந்த 6 மாதங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்,

இந்த நிலையில் வழக்கம் போல பூஜையை முடித்து விட்டு கோவில் நடையை பூட்டி விட்டு பூசாரி சென்றார். நேற்று முன்தினம் காலை கோவிலை திறக்க தர்மகர்த்தா வெங்கடாசலம் சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. பிறகு கோவிலை சுற்றி பார்த்த போது கோவிலின் பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் இரண்டு உண்டியல்களும் உடைந்து கிடப்பது தெரியவந்தது.


உண்டியலில் இருந்த பணம் சுமார் ரூ. 50 ஆயிரம் மற்றும் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக தகவலறிந்து வந்த பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் மர்ம நபர்கள் கோவிலின் அருகே பூஜைகள் செய்து, கோழி பலியிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்