அரசு பழத்தோட்டத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்த கலெக்டர் 2 கி.மீ. தூரம் அவரே ஓட்டிச் சென்று ஆய்வு செய்தார்

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். 2 கி.மீ. தூரம் அவரே மாட்டு வண்டியை ஓட்டினார்.

Update: 2018-12-01 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் உள்ள அரசு பழத்தோட்டம் கடந்த 1922-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னரால் தொடங்கப்பட்டது. 31.76 ஏக்கர் கொண்ட இந்த பழத்தோட்டத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக உள்ளது.

மீதி உள்ள 16 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை சுற்றுலா திட்டம் கடந்த மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்த பண்ணை சுற்றுலாவில் விவசாயிகள் பசுமை பயிற்சி கூடம், இயற்கை வேளாண்மை தேவைக்கு இயற்கை உரம் தயாரிப்பு முறை, மூலிகை தோட்டம், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தோட்டம் அமைப்பது, மீன்வளர்ப்பு தொட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு பழத்தோட்டத்தில் நேற்று மாலை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார். அங்கு மாட்டு வண்டியை அவரே ஓட்டியபடி சுமார் 2 கி.மீ. தூரம் ஆய்வு நடத்தினார். அந்த மாட்டு வண்டியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுடன் அவருடைய குடும்பத்தினரும் இருந்தனர். கலெக்டர் மாட்டு வண்டி ஓட்டியதை, அதிகாரிகள் உள்பட அனைவரும் வியந்து பார்த்தனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மீன் வளர்ப்பு தொட்டியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே மீன்பிடித்தார்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறுகையில், சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பழமையான, இன்று பயன்பாட்டில் இல்லாத, இப்போது விழாக்களில் மட்டும் போட்டி விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் ரேக்ளா வண்டியும் பழத்தோட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு போதிய வரவேற்பு இருந்தால் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, சப்-கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, நாகர்கோவில் சப்-கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், தோட்டக்கலை துணை இயக்குனர் அசோக் மேக்கரின், உதவி இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், ஷீலா ஜாண், மேலாளர் சரவணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ஆறுமுக பெருமாள், உதவ் இயக்குனர் மகாலிங்கம், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்